அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள “அன்பில் அவன்” படத்தின் டீசர் மற்றும் தலைப்பு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
விழாவில் இருவரும் பேசிய விதம் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தியது. முதலில் பேசிய ப்ரீத்தி முகுந்தன், “அசோக் செல்வன் ஒரு நாள் மிகவும் ஸ்டைலாக வருவார், மறுநாள் சுமாராக வந்து விடுவார்” என்று கலாய்த்தார்.
அதற்கு உடனே பதிலளித்த அசோக் செல்வன், “இதை படப்பிடிப்பு தளத்திலேயே என்னிடம் சொல்வார். என் இன்ஸ்டாகிராம் ப்ரொஃபைலை பார்த்து ‘இது என்ன ப்ரொஃபைல்? நீயெல்லாம் நடிகரா?’ என்று சொல்லி பதிவுகளை அழிக்கத் தொடங்கிவிடுவார்” என்று கூறினார். மேலும், “நாங்கள் நல்ல நண்பர்கள். அவர் எப்போதும் மொபைலில் இருப்பார். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். சாட்ஜிபிடி கூட அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்” என்ற அவரது காமெடி பேச்சு அரங்கையே சிரிக்க வைத்தது. இதற்கு பதிலாக ப்ரீத்தி, “நடிகராக அசோக் ரொம்ப ஜாலியாக இருப்பார். தயாரிப்பாளராக மாறும்போது மிகவும் சீரியஸாகி விடுவார். சில நேரங்களில் அந்நியன் மாதிரி மாறிவிடுவார்” என்று கலகலப்பாக கூறினார். இந்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
