மாதவன் நடித்துள்ள “ஜிடிஎன்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. தொழிலதிபர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார். பிரியாமணி, துஷாரா விஜயன், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். படம் ஆகஸ்ட் 7-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் திரைப்படங்களைப் பற்றிய ரசிகர்களின் விமர்சனங்கள் குறித்து மாதவனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
“இப்போது டீஸர் அல்லது ட்ரெய்லர் பார்த்தவுடன் ரசிகர்கள் உடனே கருத்து சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்கள் அப்படி பேசுவதில் தவறு இல்லை. ஒரு டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் ரசிகர்களே எங்களை வாழவைக்கும் மக்கள்” என்று அவர் கூறினார். மேலும், “திரைப்படப் படைப்பாளிகள் ரசிகர்களின் கருத்தை தலைவணங்கி ஏற்க வேண்டும். அவர்கள் தான் நம்முடைய உண்மையான எஜமானர்கள்” என்று மாதவன் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.
