அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படத்திற்கு “அன்பில் அவன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் தலைப்பு டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இந்தப் படத்திற்கான கதையை எழுதியுள்ளார். படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்குகிறார். ‘ஓ மை கடவுளே’ படத்தை தயாரித்த ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
திரைக்கதை உருவாக்கத்தில் விக்னேஷ் ராஜா, ஆர். கார்த்திகேயன் மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ளனர். நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள நிலையில், இசையை கோவிந்த் வசந்தா அமைத்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக் காட்சிகளுடன், படம் காதல் மற்றும் அதிரடி கலந்த கதையாக உருவாகி வருவதை தலைப்பு டீசர் காட்டுகிறது. கடைசியாக அசோக் செல்வன் நடித்த எமக்குத் தொழில் ரொமான்ஸ் மற்றும் தக் லைப் படங்களுக்கு கலவையான வரவேற்பு கிடைத்ததால், “அன்பில் அவன்” அவரது அடுத்த வெற்றி படமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.
