துல்கர் சல்மான் நடித்துள்ள ‘ஆகாசம்லோ ஒக தாரா’ திரைப்படம் நவம்பர் 20-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் மூலம் சாத்விகா வீரவள்ளி கதாநாயகியாக அறிமுகமாகிறார். விண்வெளிக்குச் செல்ல விரும்பும் பெண்ணை மையமாகக் கொண்டு கதை உருவாகியுள்ளது.
படத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய துல்கர் சல்மான், “இது தெலுங்கு அல்லது தமிழ்ப் படம் மட்டுமல்ல; இந்தியாவின் எந்தச் சிறிய நகரத்திலும் நடக்கக்கூடிய கதை. வசூலைக் கருத்தில் கொள்ளாமல், சினிமா மீதான அன்பால் உருவாக்கப்பட்ட படம். டீசர் வெளியானபோது கிடைத்த வரவேற்பு, பெரிய நட்சத்திரங்கள் நடித்த பிரம்மாண்டப் படத்துக்குக் கிடைக்கும் வரவேற்பைப் போல இருந்தது. நம்மால் முடிந்தது கதையை நேர்மையாகச் சொல்வதுதான். அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறோம்.
இந்தப் படத்தில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் எனப் பலரும் பெண் குழந்தைகளுக்குத் தந்தையாக இருப்பவர்கள். எனக்கும் ஒரு மகள் இருக்கிறார். தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோருக்கும் மகள்கள் உள்ளனர். எங்கள் மகள்கள், சகோதரிகள், மனைவிகளுக்காகவே இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
