அக்ஷய் குமார் மற்றும் சயீப் அலிகான் இணைந்து நடித்துள்ள “ஹைவான்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் மீண்டும் ஒரே படத்தில் நடித்திருப்பதால், இந்த படம் பாலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமான அக்ஷய் குமார், ரஜினிகாந்துடன் “2.0” படத்தில் நடித்திருந்தார். மறுபுறம், சயீப் அலிகான் சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த “தேவரா” படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களின் கவனத்தையும் பெற்றிருந்தார்.
இந்த புதிய படத்தை இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். கே.வி.என் புரொடக்சன்ஸ் மற்றும் பென்னின் தெஸ்பியன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் சயாமி கெர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மும்பை, கொச்சி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிரடி காட்சிகளும் த்ரில்லர் டோனும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
