விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் பாலாஜி தரணிதரன் மீண்டும் இணைந்துள்ள புதிய படத்திற்கு “பத்தா” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ படங்களுக்கு பிறகு இந்த கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் இதுவாகும்.
இந்தப் படத்தை இயக்குநர் அட்லி தயாரிக்கிறார். லிஜோ மோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், இசையை சாய் அபயங்கர் அமைத்துள்ளார். இதுவரை தலைப்பு அறிவிக்கப்படாமல் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது முதல் பார்வை போஸ்டருடன் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில் விஜய் சேதுபதி ரெட்ரோ மற்றும் விண்டேஜ் தோற்றத்தில், புகைப்பிடித்தபடி காணப்படுகிறார். இந்த லுக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
“பத்தா” என்ற சொல்லுக்கு வட்டார வழக்கில் பல அர்த்தங்கள் உள்ளன. ஒருவரின் இருப்பிடம், முகவரி, பின்னணி, அல்லது ஒரு விஷயத்துக்கான துப்பு, தடயம், ஆதாரம் போன்ற அர்த்தங்களில் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. படத்தின் கதையுடன் தொடர்புடைய வகையில் இந்த தலைப்பு தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் ஊகித்து வருகின்றனர். படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் இந்த திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
