‘ஜெயிலர் 2’ படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படம் ‘தர்மன்’. அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.
மருத்துவ உலகை பின்னணியாகக் கொண்டு உருவாகும் கிரைம் திரில்லர் மற்றும் ஆக்ஷன் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. இதில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வரும் நிலையில், பாடல் காட்சி உள்ளிட்ட முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே ‘தி வாரியர்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் அறிமுகமான தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி, ‘தர்மன்’ படத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் ராஷி கண்ணா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மைசூரில் படப்பிடிப்பு இடைவேளையில் ரஜினிகாந்த், ராஷி கண்ணா மற்றும் ராம் பொதினேனி ஆகியோர் ஒன்றாக நடைபயிற்சி சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ராஷி கண்ணா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் ‘தர்மன்’ படத்தில் ராம் பொதினேனி நடிப்பது உறுதியாகியுள்ளது.
—
