பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் “டாக்சிக்” திரைப்படத்தின் டிரைலர் நேற்று (ஆகஸ்ட் 8) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் யஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பதுடன், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுடாரியா, ருக்மணி வசந்த் மற்றும் ஹூமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பெங்களூருவில் நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய யஷ், இந்தப் படம் சாதாரண வணிகத் திரைப்படமாக அல்ல, இந்திய சினிமாவுக்கான ஒரு பெரிய முயற்சியாக உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந்தப் படத்திற்காக எடுத்த ஒவ்வொரு முடிவும், செய்த ஒவ்வொரு உழைப்பும், திரைப்படத்தின் தரத்திற்காகவும் இந்திய திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காகவும் மட்டுமே. நான் இந்தத் துறையில் வேலை செய்கிற ஒரு தொழிலாளி. எனது சிறந்ததை கொடுக்க முயற்சிக்கிறேன். எங்களை நம்புங்கள்; இந்தப் படம் உங்களை ஆச்சரியப்படுத்தும்” என்று அவர் கூறினார்.
இயக்குநர் கீது மோகன்தாஸ் குறித்து பேசும்போது, “உலக அளவில் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற தீவிரமான கனவு அவரிடம் இருக்கிறது. ஒரு உண்மையான சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தனது நேரத்தையும் வாழ்க்கையையும் அர்ப்பணித்துள்ளார். அந்த உழைப்பின் பலனை நீங்கள் திரையில் காண்பீர்கள்” என்றார்.
தயாரிப்பாளர் வெங்கட்டையும் யஷ் சிறப்பாக பாராட்டினார். “இப்போது ஒரு படம் நின்றுவிட்டது, கைவிடப்பட்டது என்ற வதந்திகள் அடிக்கடி வருகிறது. பெரிய கனவுகளுடன் ஒரு படத்தை உருவாக்குவது எளிதல்ல. வானிலை முதல் நடிகர்களின் தேதிகள் வரை பல சவால்கள் இருக்கும். ஆனால் எங்கள் தயாரிப்பாளர் ஒருபோதும் சந்தேகம் காட்டவில்லை” என்று அவர் தெரிவித்தார்.மேலும், “இந்தப் படம் இரண்டு ஆண்டுகளாக உருவாகி வருகிறது. 200 நாட்களுக்கும் மேல் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இவ்வளவு பிஸியான நடிகர்கள் அனைவரும் தங்கள் நேரத்தை ஒதுக்கியுள்ளனர். நாங்கள் செலவழித்த ஒவ்வொரு ரூபாயும் திரையில் தெரியும். வெறும் பணம் சம்பாதிப்பதற்காக அல்ல, சிறந்த திரைப்படத்தை உருவாக்குவதற்காகவே இந்த முயற்சி” என்றும் யஷ் கூறினார்.
