இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் “வாரணாசி” திரைப்படத்தின் புதிய அப்டேட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்தப் படம், உலகளாவிய அளவில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. “ஆர்ஆர்ஆர்” படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இந்தப் படத்திற்கும் இசையமைத்து வருகிறார். ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. மகேஷ்பாபுவின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துள்ள “ருத்ரா” கதாபாத்திரத்தின் பிரத்யேக படங்களை படக்குழு வெளியிட்டது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து பேசிய ராஜமவுலி, “ருத்ரா என்பது சாதாரண மனிதன் அல்ல. தன்னைவிட பெரிய நோக்கத்திற்காக வாழ வேண்டிய விதியை சுமக்கும் மனிதன். ஒருபுறம் நகைச்சுவை உணர்வு கொண்டவர்; மறுபுறம் மென்மையும் கடுமையும் ஒன்றாக கலந்துள்ளவர். அந்த இரு பரிமாணங்களையும் மகேஷ்பாபு மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்” என்றார்.
மேலும், “இந்த காட்சிகள் ஸ்டுடியோவில் அல்ல, உண்மையான இயற்கை சூழலில் படமாக்கப்பட்டவை. கிளிமஞ்சாரோ மற்றும் மாசாய் மாரா பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தும்போது பார்த்த காட்சிகளின் பிரம்மாண்டத்தை ஐமேக்ஸ் திரையாலும் முழுமையாகப் பதிவு செய்ய முடியாது என்று எனக்கே தோன்றியது” என்றும் அவர் கூறினார். படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்துள்ளது.
