விஜய் சேதுபதி நடிப்பில், தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கியுள்ள “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” திரைப்படம் பான் இந்தியா அளவில் உருவாகி வருகிறது. மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்தை பூரி ஜெகநாத் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.படத்தில் விஜய் சேதுபதியுடன் தபு, சம்யுக்தா மேனன், நிவேதா தாமஸ் மற்றும் துனியா விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் படம் வெளியாக உள்ளது.
சமீபத்தில் வெளியான டீசர், அதிரடி காட்சிகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் வழங்கிய பின்னணி இசையும் தனி கவனத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில், படக்குழு தற்போது நடிகை தபுவின் கதாபாத்திரத்திற்கான சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், அவர் கெளரி ஹெக்டே என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. வீடியோவில் இடம்பெற்றுள்ள சில தீவிரமான காட்சிகள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, விஜய் சேதுபதி மற்றும் தபு இணைந்து வரும் காட்சிகள் படத்தில் முக்கியமான திருப்பத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
