பெங்களூருவில் நேற்று நடைபெற்ற “டாக்சிக்” திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா பங்கேற்றது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள இந்தப் படத்தில், நயன்தாரா அவரது சகோதரியாக நடித்துள்ளார்.
பொதுவாக திரைப்பட விளம்பர நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்காத நயன்தாரா, இந்த விழாவில் நேரில் கலந்துகொண்டது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. அதற்கான காரணத்தை அவர் மேடையிலேயே விளக்கினார்.
“நான் புரமோஷன் நிகழ்ச்சிகளை விரும்புவதில்லை என்பதல்ல. அந்த மாதிரியான மேடைகளில் நான் சௌகரியமாக உணர்வதில்லை. அதனால்தான் பட விழாக்களுக்கும் எனக்கும் இடைவெளி. ஆனால் ‘டாக்சிக்’ எனக்கு மிகவும் முக்கியமான படம். குறிப்பாக யஷ் இந்த விழாவிற்கு வருமாறு என்னை நேரடியாக அழைத்தார். அவர் செய்த அந்த ஒரு தொலைபேசி அழைப்பே நான் இங்கே வருவதற்கு போதுமான காரணமாக இருந்தது” என்று நயன்தாரா கூறினார்.அவரது இந்த பேச்சு ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
