‘சென்னை 600028’ மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு, தமிழ் திரைத்துறையில் தனது 20 ஆண்டு பயணத்தை நிறைவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு, தன்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது முதல் படத்தின் மீது நம்பிக்கை வைத்த மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் தயாரிப்பாளர்-பாடகர் எஸ்.பி.பி. சரண் ஆகியோருக்கு முதற்கண் நன்றி தெரிவித்த அவர், “இந்த இருபது ஆண்டுகள் ஒரு அழகான பயணமாக அமைந்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதிவில், “ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமானது. ஒவ்வொரு கதையும் புதிய சவால்களை கொண்டு வந்தது. சில படங்கள் உடனே கொண்டாடப்பட்டன, சில படங்கள் காலப்போக்கில் அன்பைப் பெற்றன, சில படங்கள் என்னை வளர்த்த பாடங்களாக அமைந்தன. ஆனால் சினிமா மீதான என் ஆர்வம் மட்டும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தன் புதிய முயற்சிகளுக்கு கிடைத்த ஆதரவே இந்த நீண்ட பயணத்திற்குக் காரணம் என கூறிய அவர், ரசிகர்களுக்கான நன்றியை சிறப்பாக பதிவு செய்துள்ளார்.“என் ஏற்றத் தாழ்வுகளின் போதும் நீங்கள் என்னுடன் இருந்தீர்கள். ஒவ்வொரு புதிய முயற்சியையும் ஊக்கப்படுத்தினீர்கள். அந்த அன்புதான் என்னை தொடர்ந்து முன்னேற வைக்கும் தன்னம்பிக்கை” என்று அவர் எழுதியுள்ளார்.
இனியும் தனது வழக்கமான வித்தியாசமான பாணியில் புதிய முயற்சிகளுடன் பயணத்தைத் தொடரப்போவதாக தெரிவித்துள்ள வெங்கட் பிரபுவின் இந்த பதிவு, திரையுலகினரும் ரசிகர்களும் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
