Advertisement

“ஒருநாள் பார்க்க முடியாத சூர்யா சாருடன் இன்று நடிக்கிறேன்”… மமிதா பைஜூ உருக்கம்!

மலையாளத்தில் வெளியான “பிரேமலு” திரைப்படத்தின் மூலம் பெரும் கவனம் பெற்ற மமிதா பைஜூ, தற்போது தமிழ் சினிமாவில் வேகமாக முன்னணி நடிகையாக உயர்ந்து வருகிறார். விஜய்யுடன் நடித்த “ஜனநாயகன்” படத்திற்குப் பிறகு, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளது.

படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது. அப்போது பேசிய மமிதா, சூர்யாவுடன் இணைந்து நடித்த அனுபவத்தை உணர்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.“2015-ல் சூர்யா கொச்சிக்கு வந்த ஒரு நிகழ்ச்சியில் அவரை பார்க்க நான் மிகவும் ஆசைப்பட்டேன். அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். கோட்டயத்திலிருந்து கொச்சிக்கு வர வேண்டும் என்பதால், என் பெற்றோர் அனுமதி தரவில்லை. ஆனால் என் அண்ணன் மட்டும் சென்று சூர்யாவுடன் புகைப்படம் எடுத்துவந்து அனைவருக்கும் காட்டினார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்தபோது நான் மிகவும் வருந்தினேன்” என்று அவர் நினைவுகூர்ந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “இன்று அதே சூர்யாவின் திரைப்படத்தில் நான் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். அப்போது அவரை நேரில் பார்க்க முடியாத நான், இன்று அவருடன் திரையில் நடிக்கிறேன் என்பது வாழ்க்கையின் மிக அழகான திருப்பம். இது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆசீர்வாதம்” என்றார். மமிதாவின் இந்த பேச்சு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply