நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் “மகுடம்”. பல ஆண்டுகளாக ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களை கவர்ந்து வரும் விஷால், இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் புதிய பொறுப்பை ஏற்று இயக்குநராகவும் கால்பதித்துள்ளார். ஆரம்பத்தில் ரவி அரசு இயக்கிய இப்படத்தை, சில காரணங்களால் பின்னர் விஷால் தானே இயக்கி முடித்துள்ளார்.
பிரம்மாண்டமான ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், விஷால் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பது படத்தின் சிறப்பம்சமாக கூறப்படுகிறது.
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 99-வது திரைப்படமாக உருவாகியுள்ள “மகுடம்” படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஆக்ஷன், எமோஷன் மற்றும் மாஸ் அம்சங்கள் கலந்து உருவாகியுள்ள இப்படம், வருகிற ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அதே நாளில் சூர்யா நடிப்பில் வெளியாகும் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” திரைப்படமும் திரைக்கு வருவதால், பாக்ஸ் ஆபீஸில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த “மகுடம்” திரைப்படத்தின் டிரெய்லர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாக கவனம் பெற்று வருகிறது.
