நடிகைகளின் கவர்ச்சியான நடிப்பைச் சுற்றி எழும் விமர்சனங்கள் குறித்து தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார் பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி. ஒரு நடிகை திரையில் கவர்ச்சியாகத் தோன்றுவதற்கும் ஆபாசமாக நடிப்பதற்கும் இடையிலான வேறுபாட்டை அவர்களே நன்கு அறிந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், நடிகைகளைத் தேவையின்றி விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
‘மாம்’, ‘போஸ்டர் பாய்ஸ்’, ‘லைலா மஜ்னு’, ‘புல்புல்’ உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்துள்ள திரிப்தி டிம்ரிக்கு, 2023-ல் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் வெளியான ‘அனிமல்’ திரைப்படம் இந்திய அளவில் பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தற்போது பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தில் கதாநாயகியாகப் பணியாற்றி வருகிறார். சினிமாவில் தனது பத்தாண்டு பயணம் விரைவில் நிறைவடைய உள்ளதாகவும், ‘அனிமல்’ தனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ‘ஸ்பிரிட்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை உறுதிப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
‘அனிமல்’ படத்தில் நடித்தபோது தனது நடிப்புக்குப் பாராட்டுகள் கிடைத்த அதே நேரத்தில், கவர்ச்சியான காட்சிகளில் நடித்ததற்காகப் பல்வேறு விமர்சனங்களையும் எதிர்கொண்டதாக திரிப்தி கூறியுள்ளார். நடிகைகள் என்றாலே எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது” எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், திரைப்படங்களில் இடம்பெறும் காட்சிகள் காலத்திற்கேற்ப மாறி வருவதாகக் குறிப்பிட்ட அவர், கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்பதற்காக எந்த நடிகையும் சினிமாவுக்கு வருவதில்லை. கதையின் தேவைகள், பார்வையாளர்களின் ரசனை, தொழில்நுட்ப வளர்ச்சி எனப் பல விஷயங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன.
தொடர்ந்து பேசிய அவர், “கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் இடையிலான வித்தியாசம் நடிகைகளுக்கு நன்றாகவே தெரியும். அந்த எல்லையைப் புரிந்துகொண்டுதான் நாங்கள் நடித்து வருகிறோம். ஆனால், இந்த விஷயத்தைப் பலரும் உணர்வதில்லை. திரைப்படங்களில் முத்தக் காட்சிகளைக்கூட உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் படமாக்குகிறார்கள். எனவே, நடிகைகளைத் தொடர்ந்து குறை கூறுவதை மக்கள் கொஞ்சமாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
