மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ தொடர்… ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரதீப் ஆண்டனி, ஸ்மேஹா மணிமேகலை, சனம் ஷெட்டி மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி ஆகியோர் இணைந்து நடித்துள்ள புதிய தமிழ் வெப் தொடரான ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’, நவம்பர் 18-ம் தேதி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அப்துல் கபீஸ் இயக்கியுள்ள இத்தொடரை ஜெகன் பாஸ்கரன் தயாரித்துள்ளார். மொத்தம் 100 எபிசோடுகளாக உருவாகியுள்ள இந்தத் தொடரில், ஒவ்வொரு புதன்கிழமையும் தலா நான்கு புதிய எபிசோடுகள் வெளியிடப்பட உள்ளன.

கார்ப்பரேட் ஐடி நிறுவனத்தின் பணிச்சூழலைப் பின்னணியாகக் கொண்ட இந்தக் கதையில், குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைச் சமாளிக்கப் போராடும் இளம் தம்பதிகளான அறிவு (பிரதீப் ஆண்டனி), ஐஸ்வர்யா (ஸ்மேஹா மணிமேகலை) ஆகியோரின் வாழ்க்கை சித்தரிக்கப்படுகிறது.

எதிர்பாராத விதமாக இருவருக்கும் ஒரே ஐடி நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. ஆனால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே நிறுவனத்தில் பணிபுரியக் கூடாது என்பது அங்குள்ள விதி. வேலையை இழக்காமல் தங்களது வருமானத்தையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில், அலுவலகத்தில் தாங்கள் கணவன் – மனைவி என்பதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்ள இருவரும் திட்டமிடுகின்றனர்.

அலுவலகக் கூட்டங்கள், காபி இடைவேளைகள், கண்டிப்பான மேலாளர், துருவித் துருவிக் கேள்வி கேட்கும் சக ஊழியர்கள் எனப் பல சூழல்களுக்கு மத்தியில் தங்களது உறவை மறைக்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்பாராத நகைச்சுவையான சம்பவங்களுக்கு வழிவகுக்கின்றன. இந்தக் கலகலப்பான நிகழ்வுகளுடன், இளம் தம்பதிகள் எதிர்கொள்ளும் பண நெருக்கடிகள், குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் அன்றாட வேலைச்சூழல் ஆகியவற்றையும் கதை இணைத்துப் பேசுகிறது. ஜியோஹாட்ஸ்டாரின் ‘லாங் ரன்னிங் ஷோஸ்’ பிரிவில் இடம்பெறும் இத்தொடர், வாரந்தோறும் புதிய எபிசோடுகளுடன் பார்வையாளர்களைச் சந்திக்கவுள்ளது.

Add a Comment

Leave a Reply