ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படம் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பயணிக்கும் பிரமாண்ட கதைக்களத்துடன் உருவாகும் இந்தப் படம், ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திற்காகவே படமாக்கப்படுகிறது. இதுவரை இந்த முடிவுக்கான காரணத்தை ராஜமவுலி வெளிப்படையாக கூறவில்லை. சமீபத்தில் ஒரு பிரெஞ்சு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அவர் அதற்கான விளக்கத்தை வழங்கியுள்ளார்.
“படத்தின் காட்சிகள் மிகப் பெரிய அளவிலானவை. பார்வையாளர்கள் முழுமையாக மூழ்கடிக்கும் அனுபவத்தை பெற வேண்டும் என்பதால் ஐமேக்ஸ் தேர்வு செய்யப்பட்டது. சுமார் 300 அடி உயரமுள்ள அண்டார்டிக் பனிப்பாறைகள் மற்றும் ராமாயணத்தை நினைவூட்டும் பிரமாண்டமான வானர சேனை காட்சிகள் இதில் இடம்பெறுகின்றன” என்று அவர் கூறியுள்ளார்.
படத்தின் கதை இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், இந்த தகவல் அதன் காட்சிப்பரப்பின் பிரமாண்டத்தை வெளிப்படுத்துகிறது. முக்கிய அதிரடி காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் நடித்துள்ள ‘வாரணாசி’, 2027 ஏப்ரல் 7-ஆம் தேதி வெளியாகிறது. தற்போது படத்தின் சுமார் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
