சிம்புவுடன் நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்ற நடிகை சித்தி இத்னாணி, தற்போது முற்றிலும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட புதிய படத்தில் நடித்து வருகிறார். குறிப்பாக ‘மல்லிப்பூ’ பாடல் மூலம் அவர் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.
அதன்பிறகு ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ மற்றும் அருண் விஜயின் ‘ரெட்டை தல’ போன்ற படங்களில் நடித்த அவர், இப்போது ‘ட்ரோன்ஸ்’ என்ற அறிவியல்-பேண்டஸி திரைப்படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ளார்.
பெண்களை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் சித்தி இத்னாணி தேவதையாகவும், தேவதர்ஷினி மந்திரவாதியாகவும், குரேசி விஞ்ஞானியாகவும் நடிக்கின்றனர். ‘பன் பட்டர் ஜாம்’ படத்தை இயக்கிய ஆர். ராகவ் இந்த படத்தை இயக்குகிறார். ஒரே ஜானருக்குள் அடங்காத வகையில் பல உலகங்களையும், பல்வேறு கதாபாத்திரங்களையும் இணைக்கும் படமாக இது உருவாகி வருவதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். விஞ்ஞானம், மந்திரம், துப்பறியும் அம்சங்கள் மற்றும் நகைச்சுவை ஆகியவை கலந்த முழுமையான பொழுதுபோக்கு படமாக ‘ட்ரோன்ஸ்’ தயாராகி வருகிறது.
