தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகர் சித்தார்த், தனது திரைப்பயணத்தை மணிரத்னத்தின் உதவி இயக்குநராக தொடங்கினார். பின்னர் 2003-ல் வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தார்.
இந்தியில் வெளியான ‘ரங் தே பசந்தி’ படத்தின் மூலம் அவருக்கு தேசிய அளவில் கவனம் கிடைத்தது. இருப்பினும், அதன்பிறகு அவர் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்காதது குறித்து ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் இருந்து வந்தன.
சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசிய சித்தார்த், “எனக்கு வரும் கதைகளுக்குத்தான் நான் ஆம் அல்லது இல்லை என்று சொல்ல முடியும். ஆனால், நான் செய்ய விரும்பும் வகையான இந்தி பட வாய்ப்புகள் எனக்கு வரவே இல்லை. உண்மையில், பாலிவுட்டில் எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். தனக்கு பிடித்த கதைகள் மற்றும் வலுவான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க விருப்பம் இருப்பதாகவும், சரியான வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் இந்தி படங்களில் நடிக்க தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.தற்போது சித்தார்த் ‘ஆபரேஷன் சஃபேத் சாகர்’ என்ற வெப் தொடரில் நடித்துவருகிறார். ஜிம்மி ஷெர்கில், மிஹிர் அஹுஜா, அர்னவ் பாசின் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த தொடர் ஆகஸ்ட் 7 முதல் Netflix-ல் வெளியாக உள்ளது.
