பல மாதங்களாக ரசிகர்கள் காத்திருந்த ‘ராமாயணா’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்த நேரத்தில் வெளியிடப்பட்டது. வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய இந்த டிரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
வால்மீகி எழுதிய ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு நிதேஷ் திவாரி இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக மிகப்பெரிய பொருட்செலவில் இயக்கி வருகிறார். ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். முதல் பாகம் 2026 தீபாவளியிலும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளியிலும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். முன்பு வெளியான கிளிம்ப்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், டிரெய்லருக்கான ஆர்வம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது.
இந்நிலையில், புதுடெல்லி மற்றும் அமெரிக்காவின் சான்டியாகோ காமிக்-கான் நிகழ்ச்சிகளில் திரையிடப்பட்ட சில காட்சிகள் செல்போனில் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் கசிந்தன. அந்த வீடியோக்கள் பரவியதை தொடர்ந்து, பல மாத உழைப்பில் உருவான காட்சிகள் முன்கூட்டியே வெளியானது வருத்தமளிப்பதாக ரசிகர்களும் திரையுலகினரும் கருத்து தெரிவித்தனர்.இப்போது வெளியான அதிகாரப்பூர்வ டிரெய்லரில் பிரமாண்ட விஷுவல் எபெக்ட்ஸ், வலுவான பின்னணி இசை மற்றும் கதாபாத்திரங்களின் தோற்றம் பெரும் கவனம் பெற்றுள்ளன.
