அமெரிக்க ரெக்கார்டிங் அகாடமி அறிமுகப்படுத்தியுள்ள “Best Asian Pop Music Performance” என்ற புதிய பிரிவை தொடர்ந்து, BTS முக்கிய முடிவு ஒன்றை அறிவித்துள்ளது. 2027 கிராமி விருதுகளுக்காக தங்களது புதிய ‘ARIRANG’ ஆல்பத்தை பரிந்துரைக்க அனுப்பமாட்டோம் என குழு தெரிவித்துள்ளது.
RM, ஜின், சுகா, ஜே-ஹோப், ஜிமின், வி, ஜங்குக் ஆகிய ஏழு உறுப்பினர்களும் தங்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் ஒரே கருத்தை பகிர்ந்துள்ளனர். “இசை என்பது மொழி அல்லது பிராந்தியம் அடிப்படையில் பிரிக்கப்படக் கூடாது; அது இசையாகவே கேட்கப்பட்டு நேசிக்கப்பட வேண்டும்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.
புதிய பிரிவில் K-pop, J-pop, C-pop உள்ளிட்ட ஆசிய பாப் இசைகள் ஒரே பிரிவில் சேர்க்கப்படுவது உண்மையான அங்கீகாரமா அல்லது ஆசிய கலைஞர்களை தனி பிரிவில் வைத்திருப்பதா என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விதிகளில், பாடலில் குறைந்தது ஒரு ஆசிய மொழி “கணிசமான அளவில்” இடம்பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளதாகவும், இதனால் ஆங்கிலம்-கொரிய மொழி கலந்த பாடல்களின் தகுதி குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது.
இதற்கு முன் பல முறை கிராமிக்கு பரிந்துரைக்கப்பட்ட BTS இதுவரை விருது வெல்லவில்லை. உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள ‘ARIRANG’ ஆல்பம் முக்கிய பிரிவுகளில் போட்டியிடும் திறன் கொண்டதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இந்த முடிவு தற்போது உலக இசை மேடையில் ஆசிய கலைஞர்களின் இடம் குறித்த பெரிய விவாதமாக மாறியுள்ளது.
