நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற போராடிய மாணவர்கள் இளைஞர்கள் மீது தில்லி காவல்துறையினர் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசி போராட்டத்தை கலைத்தனர். மாணவர்கள் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட இந்த அடக்குமுறை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் கமல் ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ஒரு மாணவர் அழுதபோதே நாம் கவனித்திருக்க வேண்டும். ஆனால் பல மாணவர்கள் உயிரிழந்த பிறகே நாம் விழித்தோம். கற்றலுக்குப் பதிலாக பயிற்சியும், ஆர்வத்திற்குப் பதிலாக பதற்றமும், தகுதிக்குப் பதிலாக குற்றச்செயலும் இடம் பெற்றபோதே இந்த அமைப்பு சீர்குலைந்துவிட்டது. மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலாக தடுப்புகளும் தடியடிகளும் வழங்கப்பட்ட அந்த நொடியில், அந்த நாடு தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் குறித்து குறிப்பிட்ட அவர், “நீங்கள் இந்த நாட்டுக்கு மிகவும் தேவையானவர். இந்திய மாணவர்களுக்காக மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்தை இப்போது முடித்துக்கொள்ள வேண்டும். உங்கள் பணி நிறைவடைந்துவிட்டது. இனி நாட்டின் கடமையை நாடே நிறைவேற்ற வேண்டிய நேரம் இது. எங்களின் தோல்விகளை விட உங்கள் கனவுகள் உயரமாக இருக்க வேண்டும்” என்று தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
—
