நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நடிகர் ஆர். மாதவன் தனது சமூக வலைத்தள பதிவு மூலம் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கல்வி அமைப்பு நியாயம், வெளிப்படைத்தன்மை மற்றும் தகுதி அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும், அதன் மீதான மக்களின் நம்பிக்கையை பாதுகாப்பது மிக முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனது பதிவில், இந்திய இளைஞர்களின் திறமையில் எப்போதும் நம்பிக்கை வைத்திருப்பதாக குறிப்பிட்ட மாதவன், தற்போது மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்கொள்ளும் வேதனையையும் ஏமாற்றத்தையும் தானும் உணர்வதாக தெரிவித்துள்ளார். வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்கள் கல்வி அமைப்பின் நம்பகத்தன்மையை பாதிப்பதோடு, மாணவர்களின் கனவுகளையும் கடின உழைப்பையும் சிதைக்கக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு காரணமானவர்கள் மீது விரைவாகவும் கடுமையாகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கடந்த கால குறைபாடுகளை சரிசெய்து கல்வி முறையை வலுப்படுத்த அரசு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். மாணவர்கள் மனம் தளராமல் தங்களின் திறமை மற்றும் விடாமுயற்சியில் நம்பிக்கை வைத்து முன்னேற வேண்டும் என்றும், அமைதியான போராட்டத்தை அரசியல் அல்லது சுயநல நோக்கங்களுக்காக திசைதிருப்ப முயற்சிக்கும் சக்திகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இளைஞர்களின் நலனுக்காக தனது ஆதரவு எப்போதும் தொடரும் என்றும், இந்தியாவின் சிறந்த எதிர்காலத்திற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் தனது பதிவை அவர் நிறைவு செய்துள்ளார்.
