நடிகையிலிருந்து தொழில்முனைவோராக… புதிய நிறுவனத்தை அறிமுகப்படுத்திய சாக்ஷி அகர்வால்!

திரையுலகிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கவனம் பெற்ற நடிகை சாக்ஷி அகர்வால், தனது பிறந்தநாளை முன்னிட்டு புதிய முயற்சியாக ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். ‘காலா’, ‘விஸ்வாசம்’, ‘அரண்மனை 3’ உள்ளிட்ட படங்களிலும், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலும் பங்கேற்ற அவர், தற்போது தொழில்முனைவோர் என்ற புதிய அடையாளத்தையும் பெற்றுள்ளார்.

இந்த நிறுவனத்தை உருவாக்கும் பணியில் சுமார் ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து ஈடுபட்டிருந்ததாக சாக்ஷி தெரிவித்துள்ளார். ஆராய்ச்சி, தயாரிப்பு மேம்பாடு மற்றும் தரப் பரிசோதனை ஆகியவற்றில் முழு கவனம் செலுத்திய அவர், இறுதி 11 மாதங்களிலேயே 551 முறை தயாரிப்பு கலவையை மாற்றிய பிறகே விரும்பிய தரத்தை அடைந்ததாக கூறியுள்ளார். உடல்தகுதியை பராமரித்த அனுபவமும், திரைப்பட வாழ்க்கையில் எதிர்கொண்ட தேவைகளுமே தரமான ஊட்டச்சத்து தயாரிப்பை இந்திய மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ‘OKUU’ என்பது தாவர அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பிரீமியம் புரோட்டீன் பார் ஆகும். இதில் 35 கிராம் புரோட்டீன், 14 கிராம் நார்ச்சத்து மற்றும் 6 கிராம் கொலாஜன் இடம்பெற்றுள்ளதுடன், சர்க்கரை, தேவையற்ற ரசாயனங்கள் மற்றும் செயற்கை சேர்மங்கள் சேர்க்கப்படவில்லை.

இதுகுறித்து பேசிய சாக்ஷி அகர்வால், “கடந்த ஐந்து ஆண்டுகளாக என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே ‘OKUU’ உருவானது. இது வெறும் பிரபலத்தின் பெயரை வைத்து அறிமுகப்படுத்தப்பட்ட பிராண்ட் அல்ல. தரமான ஊட்டச்சத்து தயாரிப்புகளை இந்திய மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதை உருவாக்கினோம். பல ஆண்டுகளாக மனதில் இருந்த கனவு இன்று நனவாகியுள்ளது. அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த புதிய நிறுவனத்தின் மூலம் நடிகையாக மட்டுமல்லாமல், பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் துறையிலும் தனது பயணத்தை சாக்ஷி அகர்வால் தொடங்கியுள்ளார். திரையுலகைத் தொடர்ந்து தொழில்முனைவோர் உலகிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் அவர் களமிறங்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading