பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணா திரைப்படத்தில் சாய் பல்லவி மற்றும் யஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தின் முக்கிய நிகழ்வாக டெல்லியில் நடைபெற்ற ‘ராமாயணா பிரதம சங்கல்ப்’ நிகழ்ச்சியில் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சாய் பல்லவி, எனது ஹிந்தி உச்சரிப்பில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதற்காக என்னை மன்னிக்க வேண்டும். சீதா தேவி போன்ற உயர்ந்த மற்றும் புனிதமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்று அல்ல. இந்த திரைப்படம் வருங்கால தலைமுறையினரும் நினைவில் வைத்துப் பாராட்டும் வகையில் அமைய வேண்டும் என்பதற்காக, படக்குழுவினர் அனைவரும் முழு அர்ப்பணிப்புடனும் உணர்வுப்பூர்வமாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கிய தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சீதா தேவியின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகப்பெரிய ஆசீர்வாதமாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை நான் எதிர்பார்த்து தேடிச் செல்லவில்லை. தினமும் தியானம் செய்து, சீதா தேவியின் கதாபாத்திரத்தை உண்மையாக வெளிப்படுத்தும் சக்தியை எனக்கு வழங்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். எனது சிந்தனைகளையும் செயல்களையும் முடிந்த அளவு தூய்மையாக வைத்திருக்க முயற்சி செய்தேன். இந்த கதாபாத்திரம் எனக்கு வாழ்க்கையில் பல முக்கியமான பாடங்களை கற்றுத் தந்துள்ளது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
ராமாயணா திரைப்படத்தை தொடர்ந்து, தமிழில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ திரைப்படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்குப் பிறகு, மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
