சமூக வலைதளங்களை விட்டு முழுமையாக விலகிய பிறகு தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த முடிவு தனக்கு மனஅமைதியை மட்டுமல்ல, வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்க்கும் வாய்ப்பையும் வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் ‘ஜகமே தந்திரம்’, ‘கட்டா குஸ்தி’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட படங்கள் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான இடத்தை பிடித்தன. தற்போது ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் உட்பட அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் விலகிய அவரது முடிவு பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதற்கான காரணம் குறித்து தற்போது மனம் திறந்துள்ள அவர், சமூக வலைதளங்களில் நடந்த சில சம்பவங்களே அந்த முடிவை எடுக்க வைத்ததாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, என்னுடைய புகைப்படங்களை மார்பிங் செய்து தவறான விதத்தில் பரப்பினார்கள். அதோடு, எல்லை மீறும் ஆபாச கருத்துகளும், தரக்குறைவான விமர்சனங்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. அவை என்னை மனரீதியாக கடுமையாக பாதித்தன. ஒரு கட்டத்தில், உலகமே எனக்கு எதிராக இருப்பது போலவும், யாருக்கும் நான் பிடிக்காதவள் என்ற எண்ணமும் உருவாகிவிட்டது” என்று கூறினார்.
மேலும் அவர், எவ்வளவு பெரிய தொகையை யாராவது கொடுத்தாலும் சமூக வலைதள வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பும் விருப்பம் எனக்கு இல்லை. ஆன்லைன் உலகத்தை விட, மனிதர்களை நேரில் சந்தித்து பேசுவதுதான் இப்போது எனக்கு அதிக மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகிறது. அந்த மாற்றம்தான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய அமைதியை கொண்டு வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
