தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலா தம்பதியின் மகனான அகில், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். 2015-ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமான ‘அகில்’ திரைப்படம் தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து வெளியான ‘ஹலோ’ மற்றும் ‘மிஸ்டர் மஜ்னு’ ஆகிய படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதையடுத்து, 2021-ஆம் ஆண்டு வெளியான அவரது நான்காவது திரைப்படமான ‘மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்’ தான் அகிலின் முதல் வெற்றிப் படமாக அமைந்தது. இந்த திரைப்படம் சுமார் 50 கோடி ரூபாய் வசூல் செய்து அவருக்கு முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஏஜன்ட்’ திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு வெளியாகியுள்ள ‘லெனின்’ திரைப்படம் தற்போது வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அகிலின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக இது அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படம் வெளியான முதல் மூன்று நாட்களிலேயே 61 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அகிலின் முன்னாள் அண்ணியான நடிகை சமந்தா நடித்த ‘மா இன்ட்டி பங்காரம்’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்த நிலையில், அகிலும் அந்த சாதனையை எட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு டோலிவுட் வட்டாரங்களில் நிலவி வருகிறது. ‘லெனின்’ திரைப்படம் அந்த மைல்கல்லை எட்டுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
—
