பணத்திற்காக முத்தக் காட்சிகளில் நடிக்க வேண்டிய அவசியமில்லை – நடிகை சாய் பல்லவி பளீச்!

புதிய கார் வாங்குவதற்காகவோ, கூடுதல் பணம் சம்பாதிப்பதற்காகவோ நாயகர்களுடன் முத்தக் காட்சிகளில் நடிக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.’பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழகத்திலும் 200 நாட்களுக்கும் மேலாக ஓடி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, சாய் பல்லவி நடித்த ‘மலர் டீச்சர்’ கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தது. முதல் படத்திலேயே சிறந்த நடிகை என்ற பாராட்டைப் பெற்ற அவருக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. சாய் பல்லவி நடிப்பில் கடைசியாக வெளியான ‘அமரன்’ மற்றும் ‘தண்டேல்’ ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக அவர் உயர்ந்துள்ளார்.

அமீர் கானின் மகன் ஜுனைத் கானுக்கு ஜோடியாக ‘ஏக் தின்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் சாய் பல்லவி அறிமுகமானார். தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ‘ராமாயணம்’ திரைப்படத்தில் சீதையாக நடித்து வருகிறார். சினிமாவில் அறிமுகமான காலத்திலிருந்தே நடிப்பு தொடர்பாக தனக்கென சில கொள்கைகளை சாய் பல்லவி தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார். குறிப்பாக கவர்ச்சியான கதாபாத்திரங்கள், முத்தக் காட்சிகள் மற்றும் வரம்பு மீறிய காதல் காட்சிகளில் நடிப்பதை அவர் தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் இதுகுறித்து பேசிய சாய் பல்லவி, “சினிமாவில் ஆரம்பத்தில் இருந்தே முத்தக் காட்சிகளில் நடிப்பதற்கு நான் முற்றிலும் எதிரானவள். அதுபோன்ற காட்சிகளில் நடிக்க என் மனசாட்சி அனுமதிக்காது. இந்த உலகில் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியாக வாழ ஆடம்பரமான வீடு மற்றும் நல்ல கார் வேண்டும் என விரும்புவார்கள். கடவுளின் அருளால் எனக்கு அப்படிப்பட்ட மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைத்துள்ளது.

ஆடம்பரத்திற்காக மட்டுமே நான் திரைப்படங்களில் நடிப்பதில்லை. இன்னொரு புதிய கார் வாங்குவதற்காகவோ அல்லது கூடுதல் பணம் சம்பாதிப்பதற்காகவோ நாயகர்களுடன் முத்தக் காட்சிகளில் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. வரம்பு மீறிய காதல் காட்சிகளில் நடிக்க வேண்டுமென்றால் வேறு யாரையாவது அணுகுங்கள். என்னிடம் வர வேண்டாம். அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களுக்காக மட்டும் என்னை அணுகுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading