இசையமைப்பாளர் தேவாவின் மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 76 வயதான அவர், இன்று காலை திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த தேவா, கலைமாமணி மற்றும் தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது உள்ளிட்ட அங்கீகாரங்களைப் பெற்றவர்.
தேவாவின் மறைவுச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, திரையுலகப் பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு நேரில் சென்ற பலரும் இசையமைப்பாளரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் தேவாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். ரஜினியின் திரைப்பயணத்தில் முக்கிய இடம்பிடித்த ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். குறிப்பாக, ரஜினியின் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்துடன் ஒலிக்கும் புகழ்பெற்ற டைட்டில் கார்டு இசையை உருவாக்கியவரும் தேவாதான். இருவருக்கும் இடையிலான திரையிசைப் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் ரஜினி நேரில் அஞ்சலி செலுத்தியது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
