இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். 76 வயதில் தேவா காலமான செய்தி திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களையும், தேவாவின் இசைப் பங்களிப்பையும் நினைவுகூர்ந்து வைரமுத்து தனது எக்ஸ் தளப் பதிவில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
தேவாவை ‘சாவாப் பாடல்கள் தந்தவர்’ என்றும் ‘தேனிசைத் தென்றல்’ என்றும் குறிப்பிட்டுள்ள வைரமுத்து, இசையையே தனது பேச்சிலும் மூச்சிலும் கொண்டிருந்தவர் அவர் எனப் புகழ்ந்துள்ளார். இசையில் திறமையும், மனிதர்களிடம் பழகுவதில் பண்பும் கொண்ட கலைஞராகத் தேவா விளங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘அருணாசலம்’, ‘வாலி’, ‘குஷி’, ‘நேருக்கு நேர்’, ‘ஆசை’, ‘பஞ்சதந்திரம்’ உள்ளிட்ட பல படங்களின் பாடல்கள் வெற்றி பெறுவதில் தேவாவின் இசைக்கு முக்கியப் பங்கு இருந்ததாக வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, ரஜினிகாந்தின் திரைப்பிம்பத்துக்குத் தேவாவின் இசை மிகவும் பொருத்தமாக இருந்ததாக ரசிகர்கள் பேசுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனக்கு நெருக்கமான இசைக் கலைஞரை இழந்த துயரத்தை வெளிப்படுத்திய வைரமுத்து, “எனக்கு என் விரல்களில் ஒன்று போய்விட்டது” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார். மேலும், “கவலைப்படாதே சகோதரா” என்று பாடிய தேவாவை இழந்துவிட்டு, தன்னால் எப்படிக் கவலைப்படாமல் இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தேவாவைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.
