பிரபல மலையாள கதாசிரியர் சஜீவ் பழூரின் கதை மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் நடிகை நிமிஷா சஜயன் வழக்கறிஞராக நடித்துள்ளார். மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட நிமிஷா, இந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு தமிழில் அவரே டப்பிங் பேசியுள்ளார்.படத்தில் நடித்த அனுபவம் குறித்து நிமிஷா சஜயன் கூறுகையில், “மலையாளத்தில் ஏற்கனவே சஜீவுடன் பணியாற்றியுள்ளேன். இந்தக் கதாபாத்திரத்திற்காக நான் தயாரான விதம் புதுமையானதாகவும், மறக்க முடியாத அனுபவமாகவும் இருந்தது. உண்மையான நீதிமன்ற விசாரணைகளை நேரில் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதற்கு முன்பும் ஒரு படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளேன். ஆனால், ‘என்ன விலை’ திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது” என தெரிவித்துள்ளார்.
மேலும், படப்பிடிப்புக்கு முன்பு நீதிமன்றத்திற்குச் சென்று அங்கு நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரில் கவனிக்குமாறு இயக்குநர் சஜீவ் பழூர் அறிவுறுத்தியதாக நிமிஷா கூறினார். வழக்கறிஞர்கள் வாதிடும் விதம் குறித்து தனக்குள் ஒரு கற்பனை இருந்ததாகவும், ஆனால் நீதிமன்றத்தில் நேரடியாக பார்த்தபோது அவர்களின் பேச்சு, வாதிடும் முறை மற்றும் அங்குள்ள சூழல் அனைத்தும் மிகவும் இயல்பாகவும் யதார்த்தமாகவும் இருந்ததாக தெரிவித்தார். அந்த அனுபவம் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்த பெரிதும் உதவியதாகவும் கூறியுள்ளார்.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிமிஷா சஜயன் மற்றும் சஜீவ் பழூர் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். நிமிஷா கதாநாயகியாக அறிமுகமான, விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘தொண்டிமுதலும் திருஷ்சாட்சியும்’ படத்தின் கதையாசிரியராக சஜீவ் பழூர் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘என்ன விலை’ படத்தில் கருணாஸ் கதையின் நாயகனாகவும், அவரது மனைவியாக விஜியும் நடித்துள்ளனர்.
சமூக முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம், ராமேஸ்வரம் கடற்கரையை பின்னணியாகக் கொண்டுள்ளது. பக்தர்கள் கடலில் வீசும் நாணயங்களை எடுக்க முயற்சிக்கும் ஒருவரின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத சம்பவங்களை மையமாகக் கொண்டு ‘என்ன விலை’ படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
