‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனம் பெற்ற பாரி இளவழகன், தற்போது ‘அன்பே டயானா’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின் ஏழாவது தயாரிப்பாக ‘அன்பே டயானா’ உருவாகியுள்ளது.இந்தப் படத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா மீண்டும் திரையுலகில் நடிக்க திரும்பியிருப்பதும் படத்தின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
இவர்களுடன் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படம், சென்னை பெரம்பூரை பின்னணியாகக் கொண்டு குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.
சமீபத்தில் ‘அன்பே டயானா’ படத்தின் முன்னோட்டக் காட்சியை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார். அதேபோல், படத்தில் இடம்பெற்றுள்ள ‘பெரம்பூர் கானா’ பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வைரலானது.இந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வரும் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
