நடிகர் நாகார்ஜுனா தனது திரைப்பயணத்தில் 100 திரைப்படம் என்ற மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளார். 1986-ம் ஆண்டு ‘விக்ரம்’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான அவர், தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார். தற்போது அவரது 100வது திரைப்படம் குறித்த தகவல்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ் இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கும் இப்படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்காலிகமாக ‘கிங் 100’ என அழைக்கப்படும் இப்படத்தில் நாகார்ஜுனா இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 25 வயது முதல் 60 வயது வரையிலான பல்வேறு தோற்றங்களில் அவர் தோன்றுவதற்காக டி-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தில் நாக சைதன்யா மற்றும் அகில் அக்கினேனி சிறப்பு தோற்றங்களில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மூன்று கதாநாயகிகள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர்களில் ஒருவராக சுஷ்மிதா பட் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், படத்தின் முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நாகார்ஜுனா – தபு கூட்டணி சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், தபு எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நாகார்ஜுனாவின் 100வது திரைப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் நாளை, ஆகஸ்ட் 29-ம் தேதி அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகளை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
