‘அயோத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ப்ரீத்தி அஸ்ரானி, தற்போது சோலோ ஹீரோயினாக ‘நிறம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மருத்துவ குற்றங்களை மையமாகக் கொண்ட ஹைப்பர் லிங்க் ஆந்தாலஜி படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் முகேன் ராவ், தான்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, கஜராஜ், ஸ்ரீஜித் ரவி, சுரேஷ் சக்ரவர்த்தி, திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கே ஸ்கொயர் சினிமாஸ் சார்பில் கே. பிந்து மாதவி, பி. ராஜேஷ் தயாரிக்கும் இப்படத்தை பலராம் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். டி. இமான் இசையமைத்துள்ள நிலையில், சான்டோனியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் பலராம் கிருஷ்ணா கூறுகையில், வட இந்தியாவில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ‘நிறம்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். ஆறு பேரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நகரும் இந்தக் கதை, இறுதியில் ஒன்றோடு ஒன்று இணையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது ஒரு மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் ‘நிறம்’ திரைப்படம் ரசிகர்களிடையே தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
–
