தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ‘காக்கா முட்டை’, ‘தர்மதுரை’, ‘ரம்மி’, ‘கனா’, ‘சாமி 2’, ‘வடசென்னை’, ‘டிரைவர் ஜமுனா’, ‘பர்ஹானா’, ‘தீராக் காதல்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிப் படங்களிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அந்த வகையில், இயக்குநர் பரத் தர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஓ சுகுமாரி’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மகேஸ்வர ரெட்டி மூலி இப்படத்தை தயாரிக்கிறார். இளம் நடிகர் திருவீர் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
மேலும், ஜான்சி, விஷ்ணு ஓ லட்டு, ஆமணி, முரளிதர், ஆனந்த், அஞ்சிமாமா, சிவானந்த், கோட்டா ஜெயராம், கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில், தற்போது ‘ஓ சுகுமாரி’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படம் வரும் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
