தெலுங்கு நடிகர் வருண் தேஜ் நடித்துள்ள ‘கொரியன் கனகராஜு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான ‘முகுந்தா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் வருண் தேஜ். தொடர்ந்து ‘லோஃபர்’, ‘ஃபிதா’, ‘எஃப்2’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ‘மட்கா’ திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வருண் தேஜின் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘கொரியன் கனகராஜு’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மெர்லபாகா காந்தி இயக்கியுள்ளார். ஃபர்ஸ்ட் ஃபிரேம் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. இந்திய மற்றும் கொரிய பாணிகளை இணைத்து, நகைச்சுவை கலந்த ஹாரர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. தமன் இசையமைத்துள்ள ‘கொரியன் கனகராஜு’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
