‘ரா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அஷ்ரப், தற்போது ‘போட்டோகிராபர்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்திருப்பதுடன், இப்படத்தை இயக்கவும் செய்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஜனனி நடித்துள்ளார். சைக்காலஜிக்கல் சர்வைவல் மிஸ்டரி திரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் கருணாகரன், ஆடுகளம் நரேன், ‘உறியடி’ சிவா, தேவி மகேஷ், ஜே.பி. ஜெய், வேலா ராமமூர்த்தி, நிழல்கள் ரவி மற்றும் வெற்றிவேல் ராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரயீஸ் அகமது ஒளிப்பதிவு செய்ய, ராஜ்குமார் சந்திரசேகன் இசையமைத்துள்ளார். ஏபிஎஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். அப்துல் பாசித் இப்படத்தை தயாரித்துள்ளார்.
‘போட்டோகிராபர்’ படம் குறித்து அஷ்ரப் கூறுகையில், “கதையின் நாயகன் ஒரு வைல்ட் போட்டோகிராபர். மதிகெட்டான் சோலை என்ற மலைக்கிராமத்தில் தனது வாழ்க்கையையே மாற்றக்கூடிய அரிய இயற்கை நிகழ்வு ஒன்றை புகைப்படம் எடுக்க முயற்சிக்கிறார். ஆனால், அவரது தேடல் ஒரு கட்டத்தில் உயிர் பிழைப்பதற்கான போராட்டமாக மாறுகிறது. அதன்பிறகு நடக்கும் சம்பவங்களை திரில்லர் பாணியில் படம் கூறுகிறது” என தெரிவித்துள்ளார்.சமீபத்தில் வெளியான ‘போட்டோகிராபர்’ படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் கவனம் பெற்று வைரலானது. இந்த நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
