தமிழ் சினிமாவின் மறக்க முடியாத வெற்றிப் படங்களில் ஒன்றான ‘ரன்’ திரைப்படம், 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ரீ-ரிலீஸ் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய வெளியீட்டு தேதியுடன் படம் நாளை திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்கிறது.
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் இணைந்து நடித்த இந்த திரைப்படம் 2002-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. காதல், ஆக்ஷன், குடும்ப உணர்வுகள் ஆகியவற்றை இணைத்த இப்படத்தை எ.எம். ரத்னம் தயாரித்திருந்தார். வித்யாசாகர் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள், சண்டைக் காட்சிகள் மற்றும் மாதவன் – மீரா ஜாஸ்மின் கூட்டணி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. மேலும், மீரா ஜாஸ்மின் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான முதல் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் 2002-ஆம் ஆண்டின் முக்கிய வெற்றிப் படங்களில் ஒன்றாக இது அமைந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் ‘ரன்’ திரைப்படம் ரீ-ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியீடு நடைபெறவில்லை. தற்போது வருகிற ஜூலை 10-ஆம் தேதி படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்ட டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், புதிய தலைமுறையினரும் இந்த கிளாசிக் படத்தை பெரிய திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
—
