1756-ம் ஆண்டு ஸ்ரீரங்கபுரத்தில் உள்ள பழமையான ரங்கநாதர் கோவிலில் பாதுகாக்கப்படும் பிரம்ம கமலம் என்ற தெய்வீக மலரை கைப்பற்ற முயலும் சக்திகளுக்கும், அதை பாதுகாக்கும் விராட் கர்ணாவுக்கும் இடையிலான மோதலே ‘நாக பந்தம்’ படத்தின் மையக்கதை. அப்தாலி மற்றும் பைராகி தலைமையிலான சக்திகள் அந்த மலரை கைப்பற்ற முயல, சாதாரண மனிதராக வாழும் விராட் கர்ணா தர்மத்தை காக்கும் போராளியாக மாறும் விதத்தில் கதை நகர்கிறது.
கதாநாயகனாக நடித்துள்ள விராட் கர்ணா, ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகளில் கம்பீரமாக தோன்றியிருக்கிறார். பல காலகட்டங்களில் பயணிக்கும் கதாபாத்திரத்தை உடல்மொழி மற்றும் திரை இருப்பின் மூலம் வலிமையாக வெளிப்படுத்தியிருந்தாலும், உணர்வுப்பூர்வமான காட்சிகளில் தேவையான ஆழம் சற்றுக் குறைவாகவே தெரிகிறது.
கதாநாயகிகளாக நடித்துள்ள ஐஸ்வர்யா மேனன் மற்றும் நபா நடேஷுக்கு பெரிய அளவில் நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு இல்லை. முரளி சர்மா மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்க்கின்றனர். அனசுயா பரத்வாஜ், சரண்யா பொன்வண்ணன், மகேஷ் மஞ்ச்ரேக்கர், ஜான் கொக்கன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும், அவர்களது கதாபாத்திரங்கள் மனதில் நிற்கும் அளவுக்கு வடிவமைக்கப்படவில்லை.
வில்லன்களாக நடித்துள்ள கருடா ராம் மற்றும் ரிஷப் சாவ்னே ஆகியோரின் கதாபாத்திரங்களும் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. புராணம், பக்தி, ஃபேண்டஸி மற்றும் ஆக்ஷனை இணைத்து வித்தியாசமான அனுபவத்தை வழங்க முயன்றுள்ள இயக்குநர் அபிஷேக் நாமா, முதல் பாதியில் சுவாரஸ்யத்தை உருவாக்கினாலும், இரண்டாம் பாதியில் அதிகப்படியான ஆக்ஷன் மற்றும் வன்முறைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் திரைக்கதை சற்று பலவீனமடைகிறது.
குறிப்பாக, சில சமூக மற்றும் மதம் சார்ந்த காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை காட்சிகளும் அளவுக்கு அதிகமாக இடம்பெற்றிருப்பது படத்தின் குறையாக தெரிகிறது. அதே நேரத்தில், ஒளிப்பதிவாளர் சவுந்தர் ராஜனின் பிரம்மாண்டமான காட்சியமைப்பு படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
