நடிகர்கள் அதர்வா, பிரீத்தி முகுந்தன், கயாது லோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இதயம் முரளி திரைப்படத்தை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்க, பிரதீப் ராகவ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். மேலும் நட்டி, தமன், நிஹாரிக்கா, ரக்சன், டிராவிட், ஏஞ்சலின், அஞ்சு குரியன், சுதாகர், யாசா ஸ்ரீ, ஜோனிடா, மாளவிகா மோகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதயம் முரளி என்ற கதாபாத்திரம், தன் காதலை வெளிப்படுத்த முடியாமல் தவித்த எண்ணற்ற காதலர்களின் பிரதிநிதியாக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நடிகர் முரளி நடித்த காதல் கதாபாத்திரங்கள், 90களின் இளைஞர்கள் அனுபவித்த ஏக்கம், தயக்கம் மற்றும் ஏமாற்றங்களை நினைவுபடுத்தும் அடையாளங்களாக இருந்தன. அந்த நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில், நடிகர் முரளியின் மகன் அதர்வா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
இன்றைய தலைமுறைக்கு புதிதாக இருக்கும் பல 90களின் வாழ்க்கை அனுபவங்களுடன் படம் தொடங்குகிறது. முத்தம் கொடுத்தால் குழந்தை பிறக்கும், விதையுடன் தர்பூசணி சாப்பிட்டால் வயிற்றில் மரம் முளைக்கும் போன்ற குழந்தைத்தனமான நம்பிக்கைகளுடன் வளரும் இதயா என்ற கதாபாத்திரத்தில் அதர்வா தோன்றுகிறார். ஆசிரியையின் மீது ஏற்படும் முதல் ஈர்ப்பு, பள்ளிப் பருவ காதல், கல்லூரி காதல் என நீளும் அவரது பயணத்தில், இறுதியில் தன் காதலை காதலியிடம் வெளிப்படுத்தினாரா இல்லையா என்பதே படத்தின் மையக் கதை.
இதயாவாக நடித்துள்ள அதர்வா, படம் முழுவதும் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் இளைஞனின் மனநிலையை நேர்த்தியாக வெளிப்படுத்த முயன்றுள்ளார். நடிப்பதற்கான அதிக வாய்ப்பு அவருக்கே கிடைத்துள்ளது. இருப்பினும், சிறுவயதில் ஏற்பட்ட காதலை இளைஞனாகியும் சுமந்து செல்லும் விதத்தில், அவரது கதாபாத்திரம் காதலின் ஆழத்தை விட குழப்பத்தையே அதிகமாக பிரதிபலிக்கிறது. முதலில் சொனிடாவை காதலிக்கும் அவர், பின்னர் டியூஷன் மையத்தில் பிரீத்தி முகுந்தனையும், அதன்பிறகு கல்லூரியில் கயாது லோகரையும் காதலிக்கிறார். இறுதியில் இவர்களில் யாரிடம் காதலை வெளிப்படுத்துகிறார், யாருடன் வாழ்க்கையை தொடர்கிறார் என்பதே திரைக்கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது.ஒரு திரைப்படத்தில் ஆரம்பத்திலேயே கதாபாத்திரங்களை தெளிவாக நிறுவி, அதன் பின்னர் கதையை நகர்த்துவது முக்கியம். ஆனால் இதயம் முரளியில் முதல் பாதி முடியும் வரை கதை எந்த திசையை நோக்கி செல்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. முதல் பாதி முழுவதும் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் நாயகன், இரண்டாம் பாதியிலும் அதே மனநிலையிலேயே தொடர்வது திரைக்கதைக்கு பலவீனமாக மாறுகிறது.
அதர்வாவுடன் நடித்துள்ள டிராவிட், சுதாகர், ரக்சன், தமன் ஆகியோர் நண்பர்களாக வந்தாலும், அவர்களது நடிப்பு பல இடங்களில் இயல்பாக இல்லாமல் தெரிகிறது. முதல் பாதியில் முக்கியமாக இடம்பெறும் சுதாகர், அதன் பிறகு திடீரென காணாமல் போகிறார். படம் முழுவதும் வரும் தமனின் முகபாவனைகளும் பெரிதாக மாற்றமின்றி இருப்பது ஏமாற்றமளிக்கிறது. மறுபுறம் கயாது லோகர் தனது கதாபாத்திரத்தின் மூலம் படத்திற்கு ஓரளவு நம்பிக்கை அளிக்கிறார். குறிப்பாக ரயில் நிலையத்தில் அதர்வாவும் கயாது லோகரும் இடம்பெறும் காதல் காட்சிகள் மட்டுமே உணர்வுபூர்வமாக பார்வையாளர்களை ஈர்க்கின்றன. முதல் பாதியில் சுதாகரின் நகைச்சுவை சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. ஆனால் கிளைமாக்ஸின் தீவிரமான தருணங்களில் திடீரென சேர்க்கப்பட்டுள்ள நகைச்சுவை காட்சிகள் கதையின் ஓட்டத்தை பாதிக்கின்றன.
தெளிவான இலக்கில்லாமல் நகரும் திரைக்கதை, ஏன் காதலிக்கிறார் என்பதே புரியாத கதாநாயகன், தொடர்ந்து வந்து மறையும் கதாநாயகிகள் என ஆழமற்ற எழுத்து படத்தின் தாக்கத்தை குறைக்கிறது. அஞ்சு குரியன், மாளவிகா மோகன் போன்ற எதிர்பாராத கதாபாத்திரங்களும் இடம்பெறுகின்றன. மேலும் தொடக்கத்திலிருந்தே பகத் பாசிலும் தோன்றுகிறார். இவ்வளவு கதாபாத்திரங்கள் இருந்தபோதிலும், அவற்றை முழுமையாக பயன்படுத்தத் தவறியுள்ளார் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன்.தமனின் பின்னணி இசை சில இடங்களில் காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. இருப்பினும், கட்டழகி பாடலைத் தவிர மற்ற பாடல்கள் பெரிதாக மனதில் பதியவில்லை. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறது. அதேநேரத்தில் பிரதீப் ராகவின் படத்தொகுப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
