மலைப்பகுதியில் வாழும் காடர் இன மக்களின் வாழ்க்கை, பெண் குழந்தைகளின் கல்வி, குழந்தைத் திருமணம் உள்ளிட்ட சமூக பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘அருள்வான்’. படிக்க வேண்டும் என்ற கனவுடன் வாழும் சிறுமி கிருத்திகாவின் போராட்டம், அவளுக்கு துணையாக நிற்கும் கலெக்டர் அருள்நிதி ஆகியோரின் பயணத்தை உணர்வுபூர்வமாகச் சொல்கிறது.
இயக்குநர் கணேஷ் விநாயகன், சமூக அக்கறை கொண்ட கதையை உண்மை சம்பவங்களின் பின்னணியுடன் சொல்லியிருக்கிறார். காடர் இன மக்களின் வாழ்வியல், கல்வியறிவு இல்லாததால் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், குழந்தைத் திருமணம் போன்ற பிரச்சினைகள் கதையின் மையமாக அமைந்துள்ளன.
ஆரவ், ரம்யா பாண்டியன் இருவரும் மலைவாழ் தம்பதிகளாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சிறுமி கிருத்திகா தனது நடிப்பால் முழுப் படத்தையும் தாங்கி நிற்கிறார். கல்விக்காக போராடும் அவரது கதாபாத்திரம் பார்வையாளர்களை நெகிழ வைக்கிறது. இடைவேளைக்குப் பிறகு வரும் கலெக்டராக அருள்நிதி அளவான நடிப்பை வழங்கியுள்ளார். சுகுமாரின் ஒளிப்பதிவு மலைப்பகுதியின் இயற்கை அழகை சிறப்பாக பதிவு செய்துள்ளது. ஜி.வி. பிரகாஷின் இசையும் கதைக்கு வலு சேர்க்கிறது. சில தேவையற்ற காட்சிகள், காடர் மொழி பயன்பாட்டால் ஏற்படும் புரிதல் சிக்கல்கள் போன்ற குறைகள் இருந்தாலும், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தை வலியுறுத்தும் விதத்தில் ‘அருள்வான்’ மனதில் நிற்கும் படைப்பாக அமைந்துள்ளது.
