1970-களின் தமிழக கிராமப் பின்னணியில் தொடங்குகிறது ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் கதை. படித்தும் வேலை கிடைக்காத விரக்தியில் வாழும் லிசி ஆண்டனியின் மகன் வெற்றி, தனது நண்பர் மாறனுடன் இணைந்து சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வாழ்க்கையை நடத்துகிறார். ஒரு கட்டத்தில் ஏற்படும் சூழ்நிலை, அவரை கொலை செய்யும் அளவுக்கு தள்ளுகிறது.
தனக்கு கடன் கொடுத்த கவிதா பாரதியை கொலை செய்த குற்றத்திற்காக வெற்றிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முந்தைய இரவில் நீதிபதி, மருத்துவர் மற்றும் சிறை அதிகாரி ஆகியோர் வெற்றியை சந்திக்கின்றனர். அப்போது, “தூக்கிலிடுவதும் அரசே செய்யும் ஒரு கொலைதான்” என வெற்றி முன்வைக்கும் வாதம், கதையை முற்றிலும் வேறொரு தளத்திற்கு கொண்டு செல்கிறது. இறுதியில் வெற்றிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதா? அவரது வாதத்திற்கு சட்டம் என்ன பதில் அளிக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
வெற்றி தனது கதாபாத்திரத்தில் வேதனை, கோபம் மற்றும் ஏமாற்றம் உள்ளிட்ட உணர்வுகளை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். லிசி ஆண்டனி, பிரிகிடா சாகா, கவிதா பாரதி, ‘பருத்திவீரன்’ சரவணன், சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட நடிகர்களும் கதைக்குத் தேவையான நடிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர். எம்.வி. பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு நீதிமன்ற அறை மற்றும் சிறை தொடர்பான காட்சிகளின் உணர்வுகளை யதார்த்தமாக பதிவு செய்துள்ளது. தர்புகா சிவாவின் பின்னணி இசை பல இடங்களில் காட்சிகளின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கிறது.
இயக்குநர் தயாள் பத்மநாபன், “சட்டத்தின் நோக்கம் பழிவாங்குவது அல்ல; மனிதனை திருத்தி மீண்டும் சமூகத்தில் வாழ வைப்பதே” என்ற கருத்தை வலுவாக முன்வைத்துள்ளார். நீதித்துறை, மனிதநேயம் மற்றும் மரண தண்டனை குறித்து பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் வகையில் திரைக்கதையை அமைத்திருப்பது படத்தின் முக்கிய பலமாக உள்ளது. சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், கிளைமாக்ஸில் எழுப்பப்படும் கேள்விகள் பார்வையாளர்களின் மனதில் நீண்ட நேரம் நிலைத்து நிற்கின்றன.
மொத்தத்தில், ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ வெறும் கொலை வழக்கை மையப்படுத்திய திரைப்படமாக இல்லாமல், மரண தண்டனை, நீதி மற்றும் மனிதநேயம் குறித்து ஆழமான விவாதத்தை ஏற்படுத்தும் சமூக அக்கறை கொண்ட படைப்பாக அமைந்துள்ளது.
