‘லவ் ஓ லவ்’ திரைப்படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரான பவிஷ், நாகதுர்காவை நான்கு ஆண்டுகளாக காதலிக்கிறார். அந்தக் காதலுக்காக அதிக செலவு செய்து ரூ.15 லட்சம் வரை கடனாளியாகிறார். இதனால் குடும்பத்திலும், வேலையிலும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார். ஒரு கட்டத்தில் இந்தக் காதல் போலீஸ் நிலையம் வரை செல்கிறது. அப்போது, “நான்கு ஆண்டுகள் நான் அனுபவித்த வேதனையை, அடுத்த நான்கு மாதங்கள் அவளும் அனுபவிக்க வேண்டும்” என்ற நிபந்தனையை காதலியிடம் முன்வைக்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது? அவர்களின் காதல் வெற்றி பெற்றதா? தவறு யார் மீது? என்பதே ‘லவ் ஓ லவ்’ படத்தின் கதை.

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்திற்குப் பிறகு ஹீரோவாக நடித்துள்ள பவிஷ், காதலால் சிக்கித் தவிக்கும் இளைஞராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காதலுக்காக செலவு செய்து கடனில் சிக்குவது, குடும்ப பிரச்னைகளை எதிர்கொள்வது, பின்னர் காதலிக்கு பாடம் புகட்ட முயல்வது போன்ற காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். நடனக் காட்சிகளிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். இருப்பினும், சில இடங்களில் தனுஷின் நடிப்பு சாயல் தெரிகிறது.

காதலியாக நடித்துள்ள நாகதுர்கா, அவந்திகா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். பணத்தின் மதிப்பை உணராமல் நடந்து கொள்வதும், பின்னர் சூழ்நிலையால் தவிப்பதும், கிளைமாக்ஸ் உணர்ச்சி காட்சிகளிலும் தனது நடிப்பால் கவர்கிறார். பக்கத்து வீட்டுப் பெண் போன்ற இயல்பான தோற்றம் அவரது கதாபாத்திரத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

வித்தியாசமான காதல் வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக வரும் செல்வராகவன் தனது அனுபவத்தால் கவனம் ஈர்த்தாலும், அவரது கதாபாத்திரத்தை இன்னும் வலுவாக பயன்படுத்தியிருக்கலாம். வனிதா, கே.எஸ். ரவிக்குமார், சவுந்தர்யா, ரம்யா உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

பாக்ஸன் இசையில் ‘வாடி பொட்டப்புள்ள’ ரீமிக்ஸ் பாடல் ரசிகர்களை கவர்கிறது. பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது. காதலால் பாதிக்கப்பட்ட இளைஞன், அதே வழியில் காதலிக்கு பாடம் கற்பிக்கும் கதைக்களம் சுவாரஸ்யமாக இருந்தாலும், திரைக்கதையில் போதிய திருப்பங்கள் இல்லை. பல இடங்களில் நீளமான வசனங்களும், தொடர்ச்சியான சண்டைக் காட்சிகளும் சலிப்பை ஏற்படுத்துகின்றன. சில காட்சிகளில் ஆணாதிக்க மனப்பான்மை மற்றும் பெண்களை கிண்டல் செய்யும் விதமான அணுகுமுறையும் பின்னடைவாக அமைந்துள்ளது. மொத்தத்தில், ‘லவ் ஓ லவ்’ வித்தியாசமான காதல் கதையை சொல்ல முயற்சித்தாலும், திரைக்கதையின் பலவீனத்தால் முழுமையாக மனதில் நிற்கவில்லை. இருப்பினும், காதல் தோல்வி மற்றும் உறவுகளின் உளவியல் குறித்து பேசும் முயற்சியாக படம் கவனம் பெறுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading