கி.மு. 8-ஆம் நூற்றாண்டில் மகாகவி ஹோமர் எழுதிய உலகப் புகழ்பெற்ற மாகாவியமான ‘ஒடிஸி’, டிரோஜன் போருக்குப் பிறகு கிரேக்க மன்னன் ஒடிசியஸ் தனது சொந்த நாடான இத்தாக்காவை அடைய மேற்கொள்ளும் சவாலான பயணத்தை மையமாகக் கொண்டது. 24 பகுதிகளும், சுமார் 600 பக்கங்களும் கொண்ட இந்த காவியம், ஆபத்துகளை வென்று மனைவி பெனிலோப் மற்றும் மகன் டெலிமாச்சோஸை அடையும் ஒடிசியஸின் போராட்டத்தை உணர்வுபூர்வமாக விவரிக்கிறது.
இந்த காவியத்தை அடிப்படையாகக் கொண்டு பல திரைப்படங்கள் வெளியானாலும், தற்போது இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தனது தனித்துவமான திரைமொழியில் ‘தி ஒடிஸி’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். ‘இன்செப்ஷன்’, ‘இன்டர்ஸ்டெல்லார்’, ‘டெனெட்’ போன்ற அறிவியல் புனைவு படங்களுக்கு பெயர் பெற்ற நோலன், முதல் முறையாக புராணக் கதைக்களத்தை கையாண்டுள்ளார்.
‘டன்கிர்க்’ மற்றும் ‘ஓப்பன்ஹைமர்’ படங்களைத் தொடர்ந்து, போரின் பின்னணியை மையமாகக் கொண்ட அவரது மூன்றாவது படைப்பாக ‘தி ஒடிஸி’ உருவாகியுள்ளது. இதனால் இதை நோலனின் ‘வார் டிரைலஜி’யின் ஒரு பகுதியாக ரசிகர்கள் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
நோலனின் நீண்டகால ஒளிப்பதிவாளர் ஹொய்ட் வேன் ஹொய்டெமா, படத்தொகுப்பாளர் ஜெனிபர் லேம் மற்றும் இசையமைப்பாளர் லூட்விக் கோரன்சன் ஆகியோரின் பங்களிப்பும் படத்தின் பிரம்மாண்டத்தை மேலும் உயர்த்தியுள்ளது. முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராவில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், தொன்மையான உலகை உயிரோட்டமாக திரையில் கொண்டு வந்துள்ளதாக பாராட்டப்படுகிறது.
—
