மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ (AMMA) அமைப்பில் இருந்து நடிகைகள் ரேவதி மற்றும் பத்மபிரியா விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், இந்த முடிவு அவசரத்தில் எடுக்கப்பட்டதல்ல என்றும், கடந்த பத்து ஆண்டுகளாக பாதுகாப்பான பணிச்சூழல், கண்ணியமான அணுகுமுறை மற்றும் சமத்துவம் போன்ற அடிப்படை உரிமைகளுக்காகவே தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் மாறினாலும், அமைப்பின் செயல்பாட்டு முறைகளும், சமத்துவமின்மையை உருவாக்கும் கட்டமைப்புகளும் மாறவில்லை என்று குற்றம்சாட்டிய அவர்கள், தாங்கள் வெளியேறுவது தோல்வி அல்ல, சுயமரியாதைக்காக எடுக்கப்பட்ட முடிவு என்று கூறியுள்ளனர். அதேசமயம், எதிர்காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக நடிகர் சங்கம் மாறும் என்ற நம்பிக்கை இன்னும் தங்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடிகை ஸ்வேதா மேனன் தலைவர் பொறுப்பேற்ற பிறகு பெண்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சமீபத்தில் இணைப் பொதுச் செயலாளர் அன்சிபா ஹாசன் தனது பதவியை ராஜினாமா செய்தது, மேலும் நடிகை லட்சுமி பிரியா தொடர்பான சர்ச்சைகள் ஆகியவை சங்கத்தின் செயல்பாடுகள் மீதான கேள்விகளை அதிகரித்துள்ளன. இந்த நிலையில், ரேவதி மற்றும் பத்மபிரியாவின் விலகல் மலையாள திரையுலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
—
