கேரளாவைச் சேர்ந்த நடிகை மிர்னா மேனன், அதிதி மேனன் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் தனது பெயரை மிர்னா மேனன் என மாற்றிக் கொண்டார். 2016-ஆம் ஆண்டு வெளியான ‘பட்டதாரி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர், அதில் இணைந்து நடித்த நடிகரை காதலித்து பின்னர் பிரிந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தில் நடித்தாலும் போதிய வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் கேரளாவுக்கு திரும்பினார்.
அதன்பிறகு, மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக ‘பிக் பிரதர்’ படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். பின்னர் மீண்டும் தமிழுக்கு திரும்பி, ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தில் அவரது மருமகளாக நடித்தார். தற்போது ‘ஜெயிலர் 2’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் மீண்டும் கதாநாயகியாக நடிக்கிறார் மிர்னா மேனன். முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் புதிய படத்தில் அவர் ஹீரோயினாக இணைந்துள்ளார். தற்போது திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இருப்பினும், படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இதுவரை வெளியிடவில்லை.
