விஜய் தொலைக்காட்சியில் வருகிற ஜூலை 6 முதல் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடர் ‘காதல் காதல் காதல்’ வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களை சந்திக்க உள்ளது. காதலை மையமாகக் கொண்ட தொடர்கள் பல வெளியாகியிருந்தாலும், ஒரே தொடரில் மூன்று தனித்தனி காதல் கதைகளை பிரதானமாகக் கொண்டு உருவாகும் தொடர் இதுவே முதல் முறையாகும்.
இந்த தொடரில் ‘பாரதி கண்ணம்மா’ புகழ் அருண் பிரசாத், மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி மற்றும் மலையாள சின்னத்திரை நடிகர் நலீப் கியா ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுக்கு ஜோடியாக ‘முத்தழகு’ தொடரின் ஷோபனா, ‘அண்ணா’ தொடரில் பிரபலமான சுசித்ரா மற்றும் ‘தங்கமகள்’ தொடரில் நடித்த மனுஸ்ரீ கார்த்திகேயன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ‘பாக்கியலட்சுமி’ தொடரின் சுசித்ரா, ‘ஹார்ட் பீட்’ வெப் தொடரின் சந்திரசேகர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.
காதலை வெறுக்கும் தந்தையின் மூன்று மகன்களும் காதலில் விழும் பின்னணியில் கதை நகர்கிறது. குடும்பம், காதல், உணர்வுகள் என கலந்த இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
—
