‘பாணா காத்தாடி’, ‘பரதேசி’, ‘சண்டிவீரன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் அதர்வா, ‘பராசக்தி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆகாஷ் பாஸ்கர் இயக்கியுள்ள இப்படத்தில் பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா மற்றும் பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்ற கயாடு லோஹர், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ‘பாய்ஸ்’ திரைப்படத்திற்குப் பிறகு இசையமைப்பாளர் தமன், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் நடிகராகவும் களமிறங்கியுள்ளார். இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் அவர் தோன்றுவது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. டிரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ள நிலையில், திரைப்படம் ஜூலை 10-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
