தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக வலம் வரும் ஆக்சன் கிங் அர்ஜுன், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கிய ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரதீப் ரங்கநாதனின் முன்னாள் உதவி இயக்குநரான சுபாஷ் கே ராஜ் இயக்கிய இந்தப் படத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான் கொகேன், பவன், திலீபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ‘கேஜிஎப்’ புகழ் ரவி பசூர் இசையமைத்துள்ளார்.
அப்பா – மகள் உறவை மையமாகக் கொண்டு முழுமையான ஆக்ஷன் படமாக உருவான ‘பிளாஸ்ட்’, கராத்தே தெரிந்த ஒரு குடும்பம் வில்லன்களை எதிர்கொள்ளும் கதையை விறுவிறுப்பாக சித்தரிக்கிறது. கடந்த மே 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், ‘பிளாஸ்ட்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.76 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுமார் ரூ.18 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், நான்கு மடங்குக்கும் அதிகமான வசூலைப் பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த ஜூன் 25-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியான இப்படத்திற்காக, ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தயாரிப்பு நிறுவனம் சிறப்பு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
—
