தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தணிக்கை சான்றிதழ் தொடர்பான சிக்கல் காரணமாக திட்டமிட்ட தேதியில் வெளியாகாத இப்படம், தற்போது அனைத்து அனுமதிகளையும் பெற்று ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
தணிக்கை வாரியம் மொத்தம் 13 மாற்றங்களை பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. வன்முறை காட்சிகளில் இடம்பெற்ற ரத்தக்கறைகள், காது அறுக்கும் காட்சிகள் மற்றும் குண்டுவெடிப்பில் உடல் உறுப்புகள் சிதறும் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ் மற்றும் ஆங்கில கெட்ட வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டதுடன், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான எச்சரிக்கை வாசகமும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களின் மூலம் மொத்தம் 43 நொடிகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், திரைப்படத்தின் இறுதி ஓட்ட நேரம் 180 நிமிடங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தணிக்கை சிக்கல் முடிவுக்கு வந்துள்ளதால், ‘ஜனநாயகன்’ திரைப்படம் இந்த மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ வெளியீட்டு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
—
